மாநில மூத்தோர் சாம்பியன் போட்டி: டாக்டர் அன்புமணி ராமதாஸ் இறகுபந்து விளையாடினார்


மாநில மூத்தோர் சாம்பியன் போட்டி: டாக்டர் அன்புமணி ராமதாஸ் இறகுபந்து விளையாடினார்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 2:32 PM GMT)

ஈரோட்டில் நடந்து வரும் மாநில அளவிலான மூத்தோர் சாம்பியன் கோப்பை போட்டி கால் இறுதியில் நேற்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு விளையாடினார்.

ஈரோடு, 

தமிழ்நாடு இறகுபந்து கழகம், ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான மூத்தோர் இறகுபந்து சாம்பியன் போட்டியை நடத்துகின்றன. கடந்த 19-ந் தேதி ஈரோடு நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமி உள் விளையாட்டு அரங்கில் போட்டிகள் தொடங்கின.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். நேற்று கால் இறுதி போட்டிகள் நடந்தன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு இறகுபந்து கழக தலைவருவமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்று இறகுபந்து விளையாடினார்.

இரட்டையர் பிரிவில் அவர் சரவணன் என்பவருடன் இணைந்து களத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக காஞ்சிபுரம் அணி வீரர்கள் விளையாடினார்கள். தொடக்கம் முதலே அன்புமணி ராமதாஸ் விறுவிறுப்பாக அடித்து ஆடினார். இதனால் முதல் புள்ளியை அவரது அணி பெற்றது. தொடர்ந்து போட்டி ரசிகர்களின் உற்சாக கைத்தட்டல்களுடன் நடந்தது.

சிறப்பாக நடந்த இந்த போட்டியில் 2 அணிகளும் உற்சாகமாக விளையாடின. இறுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பினை தவறவிட்டது. 3 செட்டுகள் விளையாடியதில் முதல் செட்டை 24-22 என்ற புள்ளிக்கணக்கில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அடுத்து 2 செட்களிலும் 19-21, 14-21 என்ற புள்ளிகளில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகள் சிலருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடக்கின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், தேசிய அளவிலான போட்டிக்கும் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

போட்டிகளை ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க தலைவர் செல்லையன் என்கிற ராஜா, செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளரும், நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமி பயிற்சியாளருமான கே.செந்தில்வேலன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.

Next Story