சென்னை மயிலாப்பூரில் பழைய புத்தக கடை நடத்தி வந்த ஆழ்வார் மரணம் அறிஞர் அண்ணா, பக்தவச்சலம் இவரது வாடிக்கையாளர்கள்


சென்னை மயிலாப்பூரில் பழைய புத்தக கடை நடத்தி வந்த ஆழ்வார் மரணம் அறிஞர் அண்ணா, பக்தவச்சலம் இவரது வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 9:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் பழைய புத்தக கடை நடத்தி வந்த ஆழ்வார், மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர்கள் அறிஞர் அண்ணா, பக்தவச்சலம் உள்ளிட்டோர் இவரது கடைக்கு வந்து சென்று உள்ளனர்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பழைய காமதேனு திரையரங்கம் எதிரே நடை பாதையில் அமைந்துள்ள ஆர்.கே.ஆழ்வார் பழைய புத்தக கடை, புத்தக பிரியர்களிடையே மிகவும் பிரபலம் ஆகும். சுமார் 70 வருடங்களாக இந்த கடையை ஆர்.கே.ஆழ்வார்(வயது 88) நடத்தி வந்தார். இவர், ‘தாடி தாத்தா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார்.

இவரது புத்தக கடையில் பல அரிய பழைய புத்தகங்கள் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், சென்னை முழுவதிலும் இருந்து ஏராளமான வாசகர்கள் இங்கு வந்து செல்வார்கள். லஸ் சர்ச் சாலையில் இந்த புத்தக கடை ஒரு அடையாளம் என்றால் மிகையல்ல.

முதுமை காரணமாக கடந்த 5 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஆழ்வார், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்த செய்தி அப்பகுதி வாசகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட ஆழ்வார், தனது 15-வது வயதில் சினிமா ஆசையில் சென்னை வந்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இதற்கிடையில் அவருடைய மாமா திடீரென காலமானார். இதனால் அவர் லஸ் சர்ச் சாலை நடைபாதையில் நடத்தி வந்த சிறு புத்தக கடையை ஆழ்வார் ஏற்று நடத்த தொடங்கினார்.

ஆரம்பத்தில் பழைய புத்தகங்களை அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று சேகரித்து, அவற்றை பாதி விலையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவருக்கு புத்தகங்களுடன் ஏற்பட்ட பிணைப்பால் இந்த கடையே தனது உயிராக நினைத்து வாழ்ந்தார்.

இவரது கடையில் பல அரிய புத்தகங்கள், கலை, அறிவியல், பொறியியல், சட்டம், நாவல், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பாதி விலையில் விற்பனைக்கு கிடைத்ததால் பலதரபட்ட துறையை சேர்ந்தவர்களும் இவரது கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.

இவரது கடையில் பல ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும், வாசகர்கள் கேட்கும் புத்தகம் தன்னிடம் உள்ளதா? இல்லையா? என்பதையும், புத்தகம் இருந்தால் எங்கு உள்ளது? என்பதையும் சில நொடிகளில் தெரிவிப்பது இவரது தனித்துவம். புத்தகங்களுடனேயே வாழ்ந்ததால் இது சாத்தியமானது என்பதே உண்மை.

இவரது கடைக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, எழுத்தாளர் சாண்டில்யன் உள்பட சினிமா, இலக்கியம், சட்டத்துறை பிரபலங்கள் பலர் வாடிக்கையாக வந்து புத்தகங்கள் வாங்கிச் சென்றதை இவர் பெருமையாக கருதினார். பல வெளிநாட்டினரும் இவரது கடையில் அரிய புத்தகங்களை வாங்கி உள்ளனர்.

கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூலகத்துக்கு பல அரிய புத்தகங்கள் இவரது கடையில் இருந்து வாங்கப்பட்டது. நடைபாதையில் கம்புகள் வைத்து தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட இந்த எளிமையான கடையில், அவர் புத்தகங்களை வெயில், மழையில் பாதிப்படையாமல் சிறப்பாக பராமரித்தார். இதனால் பல நூலகர்கள், புத்தக சேகரிப்பாளர்கள் இவரிடம் புத்தகங்களை சிறப்பாக பராமரிப்பது குறித்த ஆலோசனைகளை பெற்று வந்தனர்.

இவரது 70 வருட சேவையை பாராட்டி பல விருதுகள் பெற்று உள்ளார். புத்தகங்களே வாழ்க்கை என முழு நேரமும் இந்த கடையிலேயே புத்தகங்களுடன் வாழ்ந்த இவருக்கு உறவினர்கள் மேரி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஜூலி, அம்மு, எலிசா, லூசி என 4 மகள்கள் உள்ளனர்.

கடைசி வரை வாடகை வீட்டிலேயே வசித்த இவர், அடுத்த தலைமுறைக்கு பல அரிய புத்தகங்களை பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். தந்தையின் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம் என அவரது 4 மகளும் உறுதியாக கூறியது, அவருக்கு ஆற்றும் மிகப்பெரிய அஞ்சலியாக தோன்றியது.

Next Story