கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதிகளில் புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதிகளில் புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:30 AM IST (Updated: 22 Dec 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் புயல் நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு, கருப்பக்கோன்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசின் புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 60 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் நிவாரண பொருட் கள் கிடைக்காத மக்கள் ஆத்திரமடைந்து, தங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சூரக்காட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மழையூர், அரியாண்டி, வெள்ளாளவிடுதி, அதிரான்விடுதி, காஞ்சிரான்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் மழையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தினமும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதால் பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே உள்ள பூவைமாநகர் ஊராட்சியில் மொத்தம் 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால் தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் 500 ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரி ஆவணத்தான்கோட்டை கடை வீதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். மறியலால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story