பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் 34 ஆயிரம் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது அதிகாரி தகவல்


பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் 34 ஆயிரம் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:15 PM GMT (Updated: 22 Dec 2018 5:33 PM GMT)

பிரதமமந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 34 ஆயிரம் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரி கோகுல கண்ணன் கூறினார்.

கரூர்,

கரூரில் பிரதம மந்திரி உஜ்வால் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியத்துடன் கியாஸ் இணைப்பினை பெறுவது தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் கரூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கோகுல கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சுற்றுப்புறசூழலை பாதிக்காத எரிசக்தி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக தான் எல்.பி.ஜி. கியாஸ் விற்பனை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12 கோடியே 10 லட்சம் கியாஸ் இணைப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2016-ல் இருந்து உஜ்வாலா திட்டத்தின்கீழ் மட்டும் 5 கோடியே 86 லட்சம் கியாஸ் இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து சாதி, மதத்தை சேர்ந்த பொதுமக்களும் உஜ்வாலா திட்டத்தில் விண்ணபித்து பயன்பெறலாம்.

இந்ததிட்டத்தின் மூலம் கியாஸ் அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகிறது. பின்னர் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பயனாளிக்கு கொடுக்கப்பட்டு அதற்குரிய தொகை வசூலிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் இதுவரை உஜ்வாலா திட்டத்தின்கீழ் 34 ஆயிரத்து 599 பயனாளிகளுக்கு கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின்கீழ் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

விரைவில் அவர்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கப்படும். மக்களின் தேவை கருதி 5 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், எச்.பி., ஐ.ஓ.சி., பி.பி.சி. கியாஸ் முகவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story