விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பழத்தோட்ட சாலை கண்மணி நகரை சேர்ந்தவர் அப்துல் சமது மகன் சிராஜூதீன்( வயது 30). இவர் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து சிராஜூதீன் விருத்தாசலத்திற்கு வந்திருந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, புதுப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டிவி. மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள் மற்றும் டி.வி.யை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story