தஞ்சை நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் மக்கள் அவதி சீரமைக்க வலியுறுத்தல்


தஞ்சை நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் மக்கள் அவதி சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 8:12 PM GMT)

தஞ்சை நகரில் குண்டும், குழியுமான சாலைகளால் அவதிப்பட்டு வரும் மக்கள், இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரில் கீழவாசல், யாகப்பாநகர், நாஞ்சிக்கோட்டை சாலை, எம்.கே.மூப்பனார் சாலைகளில் பள்ளிக்கூடங்கள், மார்க்கெட் போன்றவை உள்ளன. இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் அதிகஅளவில் இந்த சாலைகளில் சென்று வரும்.

எம்.கே.மூப்பனார் சாலையில் ராணுவ மாளிகை அருகே குண்டும், குழியுமாக மிக மோசமாக காணப்படுகிறது. அவற்றில் கட்டிடங்களை இடிக்கும்போது கிடைக்கும் மண்ணை கொண்டு வந்து மாநகராட்சி பணியாளர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். தற்காலிக ஏற்பாடாக செய்யப்பட்டிருந்தாலும் வாகனங்கள் அடிக்கடி சென்று வந்ததால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த சாலையின் வழியாக பள்ளிக்கூடத்திற்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், மாரியம்மன்கோவில், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலையின் வழியாக தான் செல்கின்றன. குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில சமயங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர்.

இதேபோல யாகப்பாநகர் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளன. இதனால் சாலை விதிகளை மீறி மற்றொரு சாலையின் வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் முறையாக சைக்கிளை ஓட்டாமல் இருகைகளை உயர்த்தியபடி போட்டி போட்டு கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் பள்ளம் இருக்கும் சாலையில் செல்வதற்கு பதிலாக மற்றொரு சாலையில் எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் நிலைமைபடுமோசமாக உள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வாகனங்களில் வருபவர்கள் கீழே விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நாஞ்சிக்கோட்டை சாலை, கீழவாசல், குந்தவைநாச்சியார் அரசு பெண்கள் கலைக்கல்லூரி சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மோசமான சாலையில் செல்வதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. வாகனத்தின் டயர் மட்டுமின்றி உதிரி பாகங்களும் சேதமடைந்து அவ்வப்போது செலவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்வோருக்கு முதுகுவலி வந்து மருத்துவ செலவு ஏற்படுகிறது. மழை நேரத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பள்ளம் இருப்பது தெரியாமல் தண்ணீரில் வேகமாக செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Next Story