காவல்துறை சுதந்திரமாக செயல்பட நாராயணசாமி தடையாக உள்ளார் பாரதீய ஜனதா குற்றச்சாட்டு


காவல்துறை சுதந்திரமாக செயல்பட நாராயணசாமி தடையாக உள்ளார் பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Dec 2018 11:00 PM GMT (Updated: 2018-12-23T02:27:01+05:30)

காவல்துறை சுதந்திரமாக செயல்பட முதல்-அமைச்சர் நாராயணசாமி தடையாக உள்ளார் என்று பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டி உள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தடையாக உள்ளார்

முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கவர்னரின் வாய்மொழி உத்தரவு செல்லாது என்று கூறி உள்ளதை புதுச்சேரி பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. நடைமுறையில் உள்ள சட்டத்தை காவல்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகளும் செயல்படுத்துவதற்கான உத்தரவு எந்த வடிவில் இருந்தால் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு அதிகாரிகளின் வேலை. அதனை தடுப்பதற்கு முதல்-அமைச்சருக்கு என்ன உரிமை உள்ளது?

புதுச்சேரி காவல்துறை முதல்-அமைச்சரின் சொல்படி நடப்பதற்கு அல்ல. சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். ஆனால் தற்போது அது நாராயணசாமி கையில் உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட அவர் தடையாக உள்ளார். இதனால் நேர்மையான அதிகாரிகள் தங்களது பணியை சரிவர செய்ய முடியவில்லை. அவர்கள் முறையான காரணமின்றி பணியிட மாற்றம் செய்யப் படுகிறார்கள்.

கஞ்சா விற்பனை

புதுவையில் ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படாததால், விபத்தில் ஹெல்மெட் இன்றி பயணம் செய்வோர்களின் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் நடைபெறுவதால் தொழிலாளர்கள் அதற்கு அடிமையாக கடனாளியாக மாறும் நிலைமை உள்ளது.

கல்லூரி மற்றும் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதல்-அமைச்சரின் தொகுதியான நெல்லித்தோப்பில் ஒரு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதேதொகுதியில் கடந்த மாதம் இரட்டைக்கொலை நடந்துள்ளது. பொது இடங்களையெல்லாம் மது அருந்தும் கூடாரமாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர். அனுமதியின்றி நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. ஆறு மற்றும் ஏரிகளில் மணல் கொள்ளை தடுக்கப்படவில்லை.

வாய்மொழி உத்தரவு

இவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த கவர்னரின் உத்தரவு வாய்மொழியாக இருந்தாலே போதும். மத்திய உள்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அனைத்து அரசுத்துறைகளையும் நிர்வகிக்கும் நிர்வாகியே கவர்னர்தான்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story