குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் உத்தரவு


குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 22 Dec 2018 9:30 PM GMT (Updated: 22 Dec 2018 9:00 PM GMT)

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

போலீஸ்நிலையத்தில் பெண்கள், முதியோர்கள் அளிக்கும் புகார்களை எவ்வாறு கையாள்வது? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு சமூக நலத்துறை, சென்னை போலீஸ்துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக அரசின் சமூக நலத்துறை கமிஷனர் வி.அமுதவல்லி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-
குடும்ப பிரச்சினை என்று வந்தால் அதற்கு உடனடியாக சட்டரீதியான தீர்வுகளுக்கு பரிந்துரைக்காமல், உளவியல் ரீதியாக ஆறுதல் சொல்லி அவர்களை கையாள வேண்டும். அவர்களிடம் குடும்ப போக்கையும், ஒற்றுமையையும் எடுத்துச்சொல்லி ‘குடும்பம் என்றால் சண்டை-சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஒற்றுமையாக இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு’, என்றெல்லாம் நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்லும் அந்த அணுகுமுறையை கையாளவேண்டும்.

ஒரு குழந்தையையோ, பெண்ணையோ கற்பழித்தல், பாலியல் தொந்தரவு என்று புகார்கள் வந்தால் குற்றவாளி யாரோ, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் யாருமே பாரபட்சம் காட்ட வேண்டாம். நாம் எடுக்கும் நடவடிக்கையை பார்த்து இனிமேல் இத்தகைய தவறுகள் செய்ய யோசிக்க வேண்டும். எனவே இதுபோன்ற விவகாரத்தில் ஒரு கடுமையான அணுகுமுறையை நாம் கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சமூக நலத்துறை கமிஷனர் வி.அமுதவல்லி பேசும்போது, சமூக நலத்துறையும், போலீஸ்துறையும் இணைந்து செயல்பட்டால் பெண்களுக்கான அனைத்து பிரச்சினைக்களுக்கும் தீர்வு காண முடியும். சென்னையில் குழந்தை திருமணம், முதியோர் கொடுமை இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர்கள் வி.பாலகிருஷ்ணன், ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர்கள் எஸ்.மல்லிகா, திருநாவுக்கரசர், எஸ்.சரவணன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Next Story