பட்டாசு ஆலை மூடப்பட்டதால் பாதிப்பு: 100 நாள் திட்டத்தில் வேலை கேட்கும் பெண் தொழிலாளர்கள்


பட்டாசு ஆலை மூடப்பட்டதால் பாதிப்பு: 100 நாள் திட்டத்தில் வேலை கேட்கும் பெண் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 22 Dec 2018 9:55 PM GMT (Updated: 22 Dec 2018 9:55 PM GMT)

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் பஞ்சாயத்து அலுவலகங்களில் விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள்.

சிவகாசி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்பவர்கள் தான். கடந்த 1 மாதமாக பட்டாசு ஆலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு இருப்பதால் அந்த ஆலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் குடும்பம் நடத்த, கிடைத்த வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வேலைகளை செய்ய உரிய அனுமதி கேட்டு பல பெண்கள் விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 3 ஆயிரம் பட்டாசு பெண் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக ஆனையூர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் போது பணி செய்ய அனுமதிக்கும்படி உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பஞ்சாயத்து செயலாளரிடம் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு பொதுமக்கள் கொடுத்து வரும் விண்ணப்பங்களை சேகரித்து முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. போதிய வருமானம் இன்றி தவித்து வந்த பட்டாசு பெண் தொழிலாளர்ளுக்கு சிவகாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்போது ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக கிடைத்து வருகிறது. இது குறித்து பஞ்சாயத்து செயலர் நாகராஜ் கூறியதாவது:-

தினமும் 30-க்கும் அதிகமான பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய உரிய அனுமதி அளித்து அதற்கான அட்டைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அந்த பெண்கள் வேலை பெற்று வருமானம் ஈட்டி வருகிறார்கள். தற்போது 130 பேர் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை பெற விண்ணப்பம் கொடுத்துள்ளனர். மாவட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கு பின்னர் அவர்களுக்கும் நிச்சயம் வேலை செய்வதற்கான உத்தரவு வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டாசு தொழிலாளர்கள் தான். எனவே மாவட்ட நிர்வாகம் 100 நாள் வேலை திட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி பட்டாசு தொழில் இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பெண்களுக்கு வேலை வழங்கி உதவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை சமூக ஆர்வலர்கள் கோரி உள்ளனர்.

Next Story