ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வருபவர்களிடம் மோசடி நகைக்கடை அதிபர் மகன் கைது


ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வருபவர்களிடம் மோசடி நகைக்கடை அதிபர் மகன் கைது
x
தினத்தந்தி 24 Dec 2018 3:45 AM IST (Updated: 24 Dec 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வருபவர்களிடம் மோசடி செய்த நகைக்கடை அதிபர் மகன் கைது செய்யப்பட்டார்.

காளையார்கோவில்,

காளையார்கோவில், சிவகங்கை, காரைக்குடி நகரங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு வருபவர்களிடம் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் மோசடி செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் காளையார்கோவில் அருகே பள்ளித்தம்பத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 74) என்பவரிடமிருந்து ரூ.54 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு திருடு போனது. இதுகுறித்து அவர் காளையார்கோவில் போலீசில் புகார் செய்தார். இதேபோல மறவமங்கலத்தைச் சேர்ந்த சோமன் என்பவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், இதுபோல பலரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து பணத்தை மோசடி செய்தது தொடர்பாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனைத்து மோசடிகளிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் பரமக்குடியில் நகைக்கடை வைத்திருக்கும் மணிவாசகம் என்பவரின் மகன் விக்னேஷ்பாபு (27) என தெரிந்ததை தொடர்ந்து, அவரை போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த விக்னேஷ்பாபு மலேசியாவிற்கு தப்பிச் சென்றார். இந்தநிலையில் நாடு திரும்பிய அவர் மானாமதுரையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.33 ஆயிரம் மற்றும் கவரிங் நகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Next Story