ஆரணியில் கடைக்காரரிடம் வழிப்பறி; 2 பேர் கைது நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டில் திருடியது அம்பலம்


ஆரணியில் கடைக்காரரிடம் வழிப்பறி; 2 பேர் கைது நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டில் திருடியது அம்பலம்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:15 AM IST (Updated: 24 Dec 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடைக்காரரிடம் வழிப்பறி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர், தனது நண்பருடன் சேர்ந்து மாமியார் வீட்டிலேயே திருடியதை ஒப்புக்கொண்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பிஞ்சலார் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராமு(வயது 56). இவர், நேற்று முன்தினம் தனது கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.550-ஐ பறித்துச்சென்றனர்.

இதுகுறித்து ராமு அளித்த புகாரின்பேரில் ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சம்பவம் தொடர்பாக அக்கரப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்த கார்த்தி(33), அவருடைய நண்பரான செவிட்டு பனப்பாக்கத்தைச் சேர்ந்த அம்பேத்கர்(37) ஆகிய 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது ராமுவிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும் கார்த்தி, செவிட்டு பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வரதம்மாள்(56) வீட்டில் தனது நண்பர் அம்பேத்கர் உதவியுடன் 15 பவுன் நகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வரதம்மாள் வீட்டில் திருடிய 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story