சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் முதல் பாதையில் 16.6 கிலோ மீட்டர் விரிவாக்கம் சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு தொடங்குகிறது


சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் முதல் பாதையில் 16.6 கிலோ மீட்டர் விரிவாக்கம் சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Dec 2018 4:45 AM IST (Updated: 25 Dec 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் முதல் பாதையில் விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 16.6 கிலோ மீட்டர் தூரம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை கண்டறியும் பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இந்தநிலையில் வண்டலூர் அடுத்து உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் டெர்மினல் அமையவிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் பாதையில் விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தை இணைக் கும் வகையில் 16.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையை விரிவாக்கம் செய்ய சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இறங்கி உள்ளனர். மெட்ரோ ரெயில் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்டால், பயணிகள், எந்தவொரு போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் மெட்ரோ ரெயில் மூலம் புதிய பஸ் டெர்மினலுக்கு வந்து சேர முடியும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் முதல் பாதையில் விமானநிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களும் இணைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பஸ் டெர்மினல் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் சேவை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் விமானநிலையம்- கிளாம்பாக் கத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக பணிக்கான சாத்திய கூறுகள் குறித்து தகவல்களை சேகரித்து அளிப்பதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ந் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. பணியை நிறைவேற்றி தர விரும்பும் நிறுவனங்கள் வரும் ஜனவரி 8-ந் தேதி மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். 9-ந் தேதி மாலை 4 மணிக்கு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் நிறுவனம், புதிதாக அமைக்கப்பட உள்ள ரெயில் பாதை, சீரமைப்பு, மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை குறிப்பாக சுரங்கம் மற்றும் மேல்மட்ட பாதையில் எத்தனை ரெயில் நிலையங்கள் அமைப்பது, அவற்றுக்கு தேவையான நிலம், கட்டுமான முறை மற்றும் சேவையைப் பயன்படுத்தக்கூடிய பயணிகள் எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

அதற்கு பிறகு மெட்ரோ ரெயில் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அளிக்கும். பின்னர் உரிய நிதியை பெற்று பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story