பூஞ்சால நோய் தாக்குதலால் அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான எக்டேரில் நெற்பயிர்கள் பதராகும் அபாயம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


பூஞ்சால நோய் தாக்குதலால் அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான எக்டேரில் நெற்பயிர்கள் பதராகும் அபாயம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

பூஞ்சால நோய் தாக்குதலால் அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான எக்டேரில் நெற்பயிர்கள் பதராகும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது திருவாரூர் மாவட்டம் தான். கடந்த 6 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினையால் 3 போக சாகுபடி செய்து வந்த நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து ஒரு போக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்த நிலையில் நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு பெறும் என நம்பி இருந்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் தமிழகத்திற்கு விடிவு பிறக்கவில்லை.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினையால் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும் நிலை இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 538 எக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கஜா புயலின் தாக்கத்தினால் பல இடங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே உள்ள கானூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களில் நெல் பழம் என்னும் பூஞ்சால நோய் தாக்குதல் அதிகமாகி பரவி வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பதராகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான எக்டேரில் நெற்பயிர்கள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு செய்வது அறியாமல் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கஜா புயலுக்கு பின்னர் வேளாண்மை துறை அதிகாரிகள் நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய பூச்சி மருந்துகளை பரிந்துரை செய்யவில்லை. இதனால் கானூர், தென்ஓடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் பயிரிடப்பட்டுள்ள நீண்ட கால பயிர்களான 1009 போன்ற பயிர் ரகங்கள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத்துறை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story