கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 4:30 AM IST (Updated: 27 Dec 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி எதிரே டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த பூசாரிப்பட்டி, கரடிகுறி, மேல்கரடிகுறி, ஒண்டியூர், மாலகுப்பம், காட்டிநாயனப்பள்ளி, தக்கேப்பள்ளி, கோட்டப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் நேற்று பெரிய ஏரி எதிரே திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஊர் பிரமுகர்களான ரமேஷ்குமார், மாணிக்கம், ராமன், கணேசன், காளிமுத்து, முத்து, முனுசாமி ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக கூறப்படும் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story