கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ. 5 லட்சத்தில் புதிய இருக்கைகள் - கலெக்டர் பிரபாகர் தகவல்


கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ. 5 லட்சத்தில் புதிய இருக்கைகள் - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2018 5:00 AM IST (Updated: 27 Dec 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ. 5 லட்சத்தில் புதிய இருக்கைகள் வழங்க உள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் கருத்து விளக்க ஓவியங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ஆடவர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பழனிவேலு, தமிழ்த்துறை தலைவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் உதவி பேராசிரியர் சிவகாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பிரபாகர் பங்கேற்று, திருக்குறள் கருத்து விளக்க ஓவியங்கள் நூலை வெளியிட, ஸ்ரீ தேவராஜ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மதியழகன், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் ஆகியோர் பெற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் பேசுகையில், ஓவியம் வரையும் மாணவிகளை கவுரவிக்கும் வகையில் 133 மாணவிகளுக்கு தலா ஒரு கிராம் தங்க காசுகளும், அவர்களுக்கு உதவிய பேராசிரியர்கள் 14 பேருக்கு தலா 2 கிராம தங்க காசுகளும், ஓவியர்களுக்கு தலா 4 கிராம காசுகளும், ஒருங்கிணைப்பாளரான தமிழ்த்துறை தலைவர் கீதாவிற்கு 8 கிராம தங்க காசுகள் வழங்கப்படும் என்றார்.

இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:- மாணவிகளின் கலை ஆர்வத்தையும், தன்னம்பிக்கைகையும் தூண்டும் விதமாக, திருக்குறளின் பொருளை உலகறிய செய்யும் நோக்கிலும், காட்சிப்படுத்தும் வகையில் 133 மாணவிகள், 1330 குறட்பாக்களுக்கும் ஓவியம் வரைந்துள்ளனர். இதனை நூலாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை வரைந்த மாணவிகள், அவர்களுக்கு உதவிய பேராசிரியர்கள், ஓவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இக்கல்லூரியில் 2 ஆயிரத்து 890 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவிகளுக்கு இருக்கை பற்றாக்குறை போக்கும் வகையில், ரூ.5 லட்சத்திற்கு புதிய இருக்கைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரிக்கு வரும் சாலையை சீரமைக்கும் வகையில் ரூ.18 லட்சத்திற்கு புதிய சாலை அமைக்கப்படும். மாணவிகள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் மூலம் மாணவிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், ஓவியர் அன்பு, நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், ஜே.சி.ஐ. விஷ்ணுவரதன் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.


Next Story