நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.இணையுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.இணையுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 26 Dec 2018 11:30 PM GMT (Updated: 26 Dec 2018 11:15 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.இணையுமா? என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

ஆரணி,

கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார். இங்கு பயணியர் விடுதியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:-

கேள்வி - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி மாதம் மக்களை சந்தித்து கிராமசபா கூட்டம் போல சிறப்பு கூட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளாரே?

பதில் - எதிர்க்கட்சித் தலைவர், மக்களை சந்திக்கிறார் என்பது அவருடைய முடிவு. கிராமங்களில் குடிமராமத்து பணிகள், ஆடு, மாடு போன்ற நலத்திட்ட உதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இப்போது ரவுடிகள் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா. அவர்களால் சாதனைகளை சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு விளம்பரம் தேவை. அதற்காக அவர்கள் செல்கிறார்கள்.

கேள்வி - மதுரையில் ஆவின் தலைவராக பொறுப்பேற்ற துணை முதல்-அமைச்சரின் தம்பி உடனடியாக நீக்கப்பட்டார். அதற்கு முழு காரணம் நீங்கள்தான் என்று சொல்லப்படுகிறதே?

பதில் - மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆவின் தலைவர் பதவி 2 முறை மதுரை மாவட்டத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜாவுக்கு வழங்கப்பட்டது. கட்சியை விட்டு நீக்கியது குறித்து கட்சித் தலைமையிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி - நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைவதாக சொல்லப்படுகிறதே?

பதில் - நாங்கள் தான் முதலிலேயே சொல்லிவிட்டோமே. தங்கத்தமிழ்ச்செல்வன் ஒரு ஓடுகாலி. தினகரன் குடும்பத்தை தவிர யாரை வேண்டுமானாலும், ஏன் தங்கத்தமிழ்ச்செல்வனை கூட கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகள் முடிவாகும். இப்போதுவரை அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்காக களப்பணிகள் நடக்கிறது.

கேள்வி - உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்?

பதில் - தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால் நீதிமன்ற உத்தரவினால் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. அதற்கு அவர்கள்தான் காரணம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பேட்டியின்போது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.


Next Story