கள்ளக்குறிச்சியில் குறைகேட்பு கூட்டம்: காப்பீடு செய்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
காப்பீடு செய்த பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி சப்-கலெக் டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் அனந்த கிருஷ்ணன், குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள் மணிகண்டன், அருங்குளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேர்முக உதவியாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருநாதன் பேசுகையில், கடந்த 2016-17-ம் ஆண்டு விவசாயிகள் காப்பீடு செய்த பயிர்களுக்கு நிவாரண தொகை மற்றும் வறட்சி நிவாரண தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் காப்பீடு செய்த பயிர்களுக்கு விரைந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யாததால் கரும்பு பயிர்கள் கருகி, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பீடு, வறட்சி நிவாரணத்தொகை வழங்ககோரி 2,432 விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். அதற்கும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்றார். இதே கோரிக்கைகளை விவசாயிகள் பலர் கூறினர்.
இதேபோல் மற்ற விவசாயிகள் பேசுகையில், பூட்டை ஏரியில் இருந்து பாசனத்திற்காக ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மற்றொரு மதகையும் திறக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் கரும்பு விவசாயிகள் கடன் வாங்கும் போது, பணமாக தராமல் தேவை இல்லாத உரங்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதால், வாகனங்களில் கரும்பு ஏற்றிச்செல்லும் போது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஏரிகளில் 10 அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுகிறது. அதனால் விதிமுறைகளை மீறி மண் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை போதிய அளவில் பெய்யாததால் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யவும், பட்டுப்புழு வளர்ப்பது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
அதற்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், கோரிக்கைகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்துக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், கூட்டுறவு வங்கி, மின்சார துறையை சேர்ந்த அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும்படி அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். மேலும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story