ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் மோசடி - 2 பேர் கைது
கோவையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவையை அடுத்த கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 54). தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தார். அவருக்கு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்ற வாலிபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறினார்.
உடனே அந்த வாலிபர், முருகானந்தத்திடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பின்னர் ‘பின்’ எண்ணை கேட்டு ‘டைப்’ செய்தார். ஆனால் பணம் வரவில்லை. உடனே அந்த ஆசாமி உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டு, தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு முருகானந்தம் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் முருகானந்தத்தின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி சூலூரில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். எந்திரத்தில் சொருகினார். முருகானந்தம் கூறிய பின் எண்ணை நினைவில் வைத்து அதை டைப் செய்து ரூ.15 ஆயிரத்தை அந்த வாலிபர் எடுத்தார். அது குறித்த எஸ்.எம்.எஸ். முருகானந்தத்தின் செல்போன் எண்ணுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து முருகானந்தம் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஏ.டி.எம். கார்டு தன்னிடம் இருக்கும்போது பணம் எப்படி எடுக்கப்பட்டது என்று கேட்டார். உடனே அந்த கார்டை வாங்கி போலீசார் பார்த்த போது அந்த கார்டு முருகானந்தத்தின் கார்டு இல்லை என்பது தெரியவந்தது.
பணம் எடுத்து தருவதாக கூறிய வாலிபர், முருகானந்தத்தின் ஏ.டி.எம். கார்டை வாங்கிக் கொண்டு வேறு கார்டை கொடுத்ததும், பின் எண்ணை டைப் செய்யாமல் முருகானந்தத்தை ஏமாற்றி அனுப்பி விட்டு மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.15 ஆயிரத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து முருகானந்தம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெருமாளிடம் புகார் செய்தார். இது குறித்து சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தீவிர விசாரணை நடத்தினார். இதையடுத்து மர்ம ஆசாமி பணம் எடுத்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை வைத்து மர்ம ஆசாமியின் புகைப்படத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த புகைப்படத்தை வைத்து ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்களின் புகைப் படத்தோடு ஒப்பிட்டு பார்த்தனர். இதில், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து மோசடி செய்தது நீலகிரி மாவட்டம் மேல்கூடலூரை சேர்ந்த கபில்(வயது 25) என்பது தெரியவந்தது. அவரின் முகவரி ஏற்கனவே போலீசாரிடம் இருந்ததால் கபிலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து முருகானந்தத்தின் ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கபில் ஏற்கனவே கோவில்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் மீது திருப்பூர், பல்லடத் தில் ஏ.டி.எம். மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்குகள் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக கபிலின் நண்பர் கோவையை சேர்ந்த ஜான் ஜோசப்(27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மற்றவர்களிடம் ஏ.டி.எம். கார்டுகளையும், ரகசிய பின் எண்ணையும் கூற வேண்டாம். ஏ.டிஎம்.மில் பணம் எடுக்க தெரியாவிட்டால் தங்களுடன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் என்றனர்.
Related Tags :
Next Story