மோடியை வீட்டுக்கு அனுப்ப நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் கரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு


மோடியை வீட்டுக்கு அனுப்ப நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் கரூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:35 AM IST (Updated: 28 Dec 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

மோடியை வீட்டுக்கு அனுப்ப நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கரூர்,

கரூர் திருமாநிலையூரில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. விழா மேடை அண்ணா அறிவாலயம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.

மேடைக்கு மாலை 5 மணி அளவில் வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மைதானம் முழுவதும் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதனைத்தொடர்ந்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முறைப்படி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

செந்தில்பாலாஜிக்கு தி.மு.க. ஒன்றும் புதிய இயக்கம் அல்ல. ஏற்கனவே இருந்த தாய் கழகம் தான். தாய், தந்தையை விட்டு பிள்ளைகள் பிரிந்து சென்றாலும், தங்களது பிள்ளைகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் நல்ல பிள்ளைகளாக மீண்டும் வந்து சேர்ந்திருப்பவர்களை வரவேற்கிறேன். சரியான நேரத்தில் தான் செந்தில்பாலாஜியும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற பயனை உரிய நேரத்தில் பெறுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்பட நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி தோற்க போகிறார் என்ற ஒரு அடையாளத்தை தந்திருக்கிறது. பாரதீய ஜனதாவின் கோட்டை என்ற பெயருக்குரிய மாநிலங்களில் அக்கட்சி தோல்வியை தழுவியிருக்கிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம்.

மத்தியில் பிரதமராக இருக்கிற மோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிசாமியும் ஆள்வதற்கு தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு செய்யாதுரை, சேகர்ரெட்டி போன்றவர்களை திருப்திபடுத்தினால் போதும். மோடிக்கு பல நாடுகளை சுற்றினால் போதும். எனவே இவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பா.ஜ.க.வின் கோட்டையான மாநிலங்களில் ஓட்டை விழுந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்து விட்டது. எனவே மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட இருக்கிறது. அதனால் தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை பார்த்து மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை ‘கிரிமினல் கேபினட்’ என பெரம்பலூர் கூட்டத்தில் நான் ஏற்கனவே பகிரங்கமாக குற்றம் சாட்டினேன். இதுவரை என் மீது அவர்கள் ஒரு வழக்கு கூட போடவில்லை. ஸ்டாலின் உண்மையை தான் பேசியிருக்கிறார் என நினைத்து விட்டார்கள் போலும். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருக்கிறது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உடனடியாக எடப்பாடி பழனிசாமி பதறியடித்து டெல்லிக்கு போய் தடை உத்தரவு பெற்றார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

இவ்வளவையும் பேசிவிட்டு இங்குள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி பேசாமல் செல்வேனா? போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதற்கு ரூ.300 கோடி டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. டெண்டர் விதிகள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கர் என இன்னொரு அமைச்சர் இருக்கிறார். அவர் மீது குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனையோ, செயல்பாடோ கிடையாது. இதற்கு உதாரணமாக ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை கூறலாம். ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்களில் 14 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அதன்பின்னர் மக்கள் கொந்தளிப்பை அடக்குவதற்காக ஆலையை மூடுவதாக நாடகமாடினார்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆலையை மூடுவதற்கு அரசாணை பிறப்பித்தால் மட்டும் போதாது. அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்து, சட்டமன்றத்தில் அதனை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றேன். நான் மட்டுமல்ல, பல தலைவர்களும் இதனை வலியுறுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு அதனை செய்யவில்லை. இப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, கொள்கை அளவில் முடிவெடுத்திருந்தால் தான் நிரந்தரமாக மூட முடியும் என தீர்ப்பு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கையாலாகாத தனத்தையே இது காட்டுகிறது. ஆலையை செயல்பட வைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. அதற்கு பல பேரங்கள் ஆலை முதலாளியுடன் நடந்து உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலே 10 தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதாகவும், இதன் மூலம் 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சியில் இதுவரை எத்தனை பேருக்கு வேலை தந்து இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பார்களா? இந்த அரசு கூறுவது எல்லாமே வெறும் வெற்று அறிவிப்புகள் தான்.

நாட்டுக்காக சிறைக்கு சென்றதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். எந்த நாட்டுக்காக என தெரியவில்லை. செந்தில்பாலாஜி கூறியது போல் ஆட்சி மாற்றம் வந்த மறுவினாடியே எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி. எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலிலும், 20 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். அதற்கான ஜனநாயக போருக்கு நாம் தயாராகி கொண்டு இருக்கிறோம். அதில் கைகோர்ப்பதற்காக கழகத்தில் இணைந்துள்ளவர்களை வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நேரு, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.பி.க்கள் கே.சி.பழனிசாமி, சின்னசாமி ஆகியோரும் பேசினார்கள். கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு, கரூர் வடக்கு நகர 5-வது வட்ட செயலாளர் சாலை ரமேஷ், சாரதி எக்ஸ்போர்ட்ஸ் கே.சுப்பிரமணியம், தாந்தோன்றி வட்ட பிரதிநிதி கோடங்கிபட்டி கார் இளங்கோவன் மற்றும் தொழிலதிபர்கள் ஆசி டெக்ஸ்டைல்ஸ் பங்குதாரர்கள் கோதூர் எம்.தியாகராஜன், கே.செல்வராஜ், அபெக்ஸ் ஏ டிரேடர்ஸ் ஆர்.வி.அசோக்குமார், கரூர் கொங்கு மெஸ் உரிமையாளர் எம்.சுப்பிரமணி, மாஸ் ரெடிமிக்ஸ் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த், மாஸ் ஏ டிரேடர்ஸ் வி.ரவிசந்திரன், கிராப்ட்ஸ் இண்டியா பி.கே.பாஸ்கரன், அப்பிபாளையம் ஊராட்சி கழக செயலாளர் கே.மாரப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விசுவை எஸ்.எம்.இளங்கோ உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

கோவையிலிருந்து கார் மூலம் நேற்று காலை 11 மணியளவில் மு.க.ஸ்டாலின் கரூர் வந்தடைந்தார். அப்போது திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கூடியிருந்த தொண்டர்கள் மேள, தாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு திரண்டிருந்த பெண்கள் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்தனர்.

கரூர் மாவட்ட தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், தி.மு.க. நெசவாளர் அணி மாநில தலைவருமான பரமத்தி சண்முகம், உடல்நலக்குறைவினால், கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார்.

Next Story