உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர் - 31 பவுன் நகைகள் மீட்பு


உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர் - 31 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 29 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை பகுதியில் நடக்கும் வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும்படி உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரனுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மாணிக்கம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது குமாரமங்கலம் அய்யனார் கோவில் அருகில் உள்ள காப்புக்காட்டில் 3 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் காப்புக்காட்டில் பதுங்கி இருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், எறையூரை சேர்ந்த ராயப்பன் மகன் சகாயராஜ் என்கிற பாண்டியன், பிரான்சிஸ் மகன் சக்திவேல் (வயது 24), ஜான்பீட்டர் மகன் மைக்கேல் ராஜ்(23) என்பதும், உளுந்தூர்பேட்டை, பில்ராம்பட்டு, நைனார்பாளையம், திருவெண்ணெய்நல்லூர், எறையூர், விசூர், விழுப்புரம், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதும், மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராஜ், சக்திவேல், மைக்கேல் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள், 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story