ஊட்டியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ஊட்டியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது.
கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக்இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி அபராதம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது.
ஆனால் தொடர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட தலைநகரமாக விளங்கும் ஊட்டி நகரில் பிளாஸ்டிக்பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவகங்கள், தனியார் காட்டேஜ்கள், வீடுகளில் உணவு சமைத்து விற்பனை செய்யும் நபர்கள் பிளாஸ்டிக்பைகளை பதுக்கி வைத்து மறைமுகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் சில இறைச்சி கடைகளிலும் பிளாஸ்டிக்பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏ.டி.சி. பஸ் நிறுத்தத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு செல்லும் எட்டின்ஸ் சாலையில் டாஸ்மாக் கடை இயங்குவதால் சாலையோர கால்வாய்களில் பிளாஸ்டிக்பொருட்கள் அதிகளவு வீசப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. இதனால் பிளாஸ்டிக்பொருட்கள் குவிந்து கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மனிதர்களின் உடல் நலனை மற்றும் சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக்பைகள் பயன் பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story