மார்த்தாண்டம் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி; கேரள வாலிபர்கள் சிக்கினர்


மார்த்தாண்டம் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி; கேரள வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:00 PM GMT (Updated: 30 Dec 2018 5:05 PM GMT)

மார்த்தாண்டம் அருகே வியாபாரி வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 3 கேரள வாலிபர்கள் சிக்கினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 61). இவர் மார்த்தாண்டம் சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.  

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் விஜயனின் வீட்டின் முன்பகுதியில் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் விஜயனுக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தனர். தொடர்ந்து அந்த 4 பேரும் வீட்டின் பின்பக்கத்துக்கு சென்றனர்.

அங்கு தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து கொண்டிருந்தனர். பீரோ உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பொதுமக்கள் திரண்டு வந்ததை கண்ட 4 பேரும் தப்பியோட முயன்றனர். ஆனால் உஷாராக இருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார்.

பிடிபட்ட 3 பேருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுபற்றி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து 3 பேரையும் மீட்டனர். மேலும், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் பாறசாலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் வியாபாரி விஜயனின் வீட்டை பல நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர். விஜயன் குடும்பத்துடன் வெளியே செல்வதை அறிந்ததும் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிடிபட்ட 3 பேருக்கும் குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனிப்படை போலீசார் 3 வாலிபர்களையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தப்பியோடிய வாலிபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story