புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 29 பேர் காயம்


புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 29 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:00 PM GMT (Updated: 30 Dec 2018 10:31 PM GMT)

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.

திருவரங்குளம்,

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. பஸ்சை காரைக்குடி தாலுகா பழைய ஆத்தாங்குடியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 48) ஓட்டினார். தனியார் பஸ் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள மணிப்பள்ளம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பியபோது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்தது.

இதில் பஸ் டிரைவர் சாத்தப்பன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த முருகானந்தம், சந்திரா, அபர்னா, லெட்சுமணன், மரியதாஸ், கணேசன், சதாசிவம், திவ்யா, தவமணி, மனோன்மணி, லோகராஜ், ராசு, நடராஜன், சுகன்யா, விஜயா, இளையபாரதி 11 பெண்கள் உள்பட சுமார் 29 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கணேஷ்நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புதுக்கோட்டை அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story