ராமேசுவரம் படகுகளை நோக்கி வெடிகுண்டுகளை வீசிய இலங்கை மீனவர்கள்; நடுக்கடலில் நடந்த அத்துமீறல்


ராமேசுவரம் படகுகளை நோக்கி வெடிகுண்டுகளை வீசிய இலங்கை மீனவர்கள்; நடுக்கடலில் நடந்த அத்துமீறல்
x
தினத்தந்தி 31 Dec 2018 4:57 AM IST (Updated: 31 Dec 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கையை சேர்ந்த மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 5 படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் சுமார் 50 பேர் இருந்துள்ளனர். திடீரென அவர்கள், ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை நோக்கி வெடிகுண்டுகளை வீசியதாக தெரியவருகிறது. அந்த வெடிகுண்டுகள் மீனவர்களின் படகுகளின் அருகில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்ததாக தெரியவருகிறது.

இதனால் ராமேசுவரம் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். உடனே கடலில் வீசியிருந்த வலைகளை எடுக்க முயன்றபோது, அந்த வழியாக இலங்கை கடற்படையினரும் ரோந்து வந்துள்ளனர். இதையடுத்து இலங்கை மீனவர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். ராமேசுவரம் மீனவர்களும் தங்களது வலைகளை எடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் கரைக்கு தப்பினர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாக தொடரும் நிலையில், இலங்கை மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்களை நோக்கி மூர்க்கத்தனமாக வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அத்துமீறல் பற்றி அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றாலும், இது பற்றி மீன்வளத் துறை அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்களின் ஒரு பகுதியினரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவமும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story