தமிழகத்தில் தாமரை மலரும்: மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


தமிழகத்தில் தாமரை மலரும்: மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2018 5:49 AM IST (Updated: 31 Dec 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில்தாமரை மலரும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டி.எம்.கோர்ட்டில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கோட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தவிர மற்றவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தவர்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்களை மதச்சார்பு கட்சி என்று கூறுகிறார்கள். மத்தியில் பா.ஜ.க. அமைக்கும் கூட்டணி தான் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தாமரை மலரும். தி.மு.க. மட்டுமின்றி அதனுடன் சேர்ந்த கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் கூட இனி ஜெயிக்க முடியாது.

மக்கள் பலன் அடையும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தந்து இருக்கிறார். ஆயுஷ்மான் திட்டம் மூலம் ஏழைகள் மருத்துவ வசதி பெறுகின்றனர்.

ஏராளமான ரெயில்வே திட்டப்பணிகள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

பிரதமர் மோடி மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி தினமும் குடிசைக்கு சென்று கொண்டு இருக்கிறார். குடிசைகள் இன்று இருப்பதற்கு 50 ஆண்டு கால காங்கிரஸ் கட்சி தான் காரணம். ஒரு வேளை 50 ஆண்டு காலம் பா.ஜ.க. ஆட்சி செய்திருந்தால் இன்று இந்தியாவில் குடிசைகளே இருந்து இருக்காது.

கட்சியின் கிளை அளவிலான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தை சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பயணத்தால் தான் வெளிநாடு முதலீடுகள் இந்தியாவில் குவிந்து இருக்கிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் செல்ல ரூ.2 ஆயிரம் செலவாகும். ஆனால் ஸ்டாலின் ரூ.30 லட்சம் செலவு செய்து தனி விமானத்தில் செல்கிறார். அவர் மோடியை ‘சாடிஸ்ட்‘ என்கிறார். உண்மையில் ஸ்டாலின் தான் சாடிஸ்ட்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆலய பாதுகாப்பு குழுவின் 50-வது ஆண்டு விழா, மதுரை கல்லூரியில் நடந்தது. அதில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, “1986-ம் ஆண்டு அறநிலையத்துறை எடுத்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே போனது“ என கேள்வி எழுப்பினார்.

Next Story