நாமக்கல்லில் தனியார் பள்ளியில் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்


நாமக்கல்லில் தனியார் பள்ளியில் தீ விபத்து தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 6:02 PM GMT)

நாமக்கல் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் நகராட்சி 17-வது வார்டிற்கு உட்பட்ட காமராஜர் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 103 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல் தளத்தில் 5 அறைகள் கொண்ட கட்டிடம் உள்ளது. அதில் ஓடு போடப்பட்டுள்ளது.

அதில் ஒரு அறையில் பள்ளி நிர்வாகத்தினர் பழைய ஆவணங்கள் மற்றும் பொருட்களை வைத்து உள்ளனர். நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் அந்த அறையின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மள,மளவென பரவி பக்கத்து அறைகளின் மேற்கூரையிலும் பற்றி எரிந்தது. பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அழகர்சாமி தலைமையில் நிலைய அலுவலர் பொன்னுசாமி மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன், வருவாய் ஆய்வாளர் பாரதிராஜா, நாமக்கல் டவுன் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் பள்ளிக்கு சென்று தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அழகர்சாமி கூறியதாவது:-

பள்ளி நிர்வாகம் 2018-ம் ஆண்டுக்கான தடையில்லா சான்றை தீயணைப்புத்துறையில் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி அறைகளில் கழிவு பொருட்களை குவித்து வைக்கக்கூடாது. அத்தகைய பொருட்களை தேக்கி வைத்திருந்த அறையில் தான் தீ பற்றி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு தடையில்லா சான்று பெற பள்ளி நிர்வாகம் விண்ணப்பம் செய்திருந்தபோதே இதை அறிவுறுத்தி இருந்தோம். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் செய்து பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம். இருப்பினும் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story