கரூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இலக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


கரூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இலக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:00 PM GMT (Updated: 31 Dec 2018 8:13 PM GMT)

கரூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, கரூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் தொழில் முனைவோர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது கூறுகையில்,

கரூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் இணையதளத்தின் மூலம் உத்யோக் ஆதார் பதிவு சான்று பெற்ற 2,362 புதிய தொழில் நிறுவனங்கள் ரூ.355 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு இதன் மூலம் 18,330 பேருக்கு வேவைாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டில் இன்றைய தேதி வரை இணையதளத்தின் மூலம் உத்யோக் ஆதார் சான்று 1,684 நிறுவனங்கள் ரூ.246 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு இதன் மூலம் 12,722 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தையல், பின்னலாடை உற்பத்தி, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, கொசுவலை உற்பத்தி ,கயிறு உற்பத்தி உள்ளிட்ட குழு தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டு நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட தொழில் முனைவோர்களுக்கு உரிமங்கள் மற்றும் வரைபட ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் ஆணையின்படி தகுதியுள்ள மானியங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசும்போது கூறியதாவது,

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் எளிதாக தொழில் தொடங்க வழிவகை செய்யும் பொருட்டு தமிழக அரசு, தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டம்-2017-ஐ இயற்றியுள்ளது. இச்சட்டத்தில் தொழிற்சாலை தொடங்க உரிமம் பெற வேண்டிய துறைகளான தீயணைப்பு துறை, பொது சுகாதாரத் துறை, மின்வாரியத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறைகளிலும் எளிதாக உரிமங்கள் மற்றும் ஒப்புதலை இணைய தளம் மூலம் பெறுவதற்கு ஆவனம் செய்யப்பட்டுள்ளது.

அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய அதிகபட்சமாக பயிற்சி 6 மாத காலத்திற்கு அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் கனவுத்திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஈர்க்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கரூர் மாவட்டத்தில் ரூ.2,000 கோடியளவில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, 20 தொழில் முனைவோருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 420 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொழில் வணிகத்துறை கூடுதல் இயக்குனர் ஏகாபரம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் ரமேஷ், கரூர் மாவட்ட தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜூ, கரூர் மாவட்ட டெக்ஸ்டைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story