வாலிபர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2018 10:28 PM GMT (Updated: 31 Dec 2018 10:28 PM GMT)

வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாத்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரகாஷ்(வயது 26) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை போலீஸ்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டுவந்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் 24–ந் தேதி 7 பேரும் போலீஸ்நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு சரக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். தஞ்சை சாலை ஆலடிக்குமுளை பகுதியில் வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் இவர்கள் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசியது. இதில் பிரகாஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


முன்விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவத்தில் பட்டுக்கோட்டை சாந்தாங்காடு பூக்கொல்லைத் தெருவை சேர்ந்த அருண்சந்தர் (28), பிரசாந்த் (23), பெருமாள் கோவில் தெரு மணிகண்டன் (24), கபிலன் (23), சுண்ணாம்புக்கார தெரு மதன் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை குண்டர் சட்டத்தில் அருண்சந்தர், பிரசாந்த், மணிகண்டன், கபிலன், மதன் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், அருண்சந்தர் உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story