மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்தில் மாட்டுச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்தில் மாட்டுச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 1 Jan 2019 5:46 AM IST (Updated: 1 Jan 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

கொங்குநாடு சான்றோர் குல நாடார் முன்னேற்ற சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமையில் செயலாளர் தேவராஜன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

1958–ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் அகில இந்திய சீர்திருத்த மாநாடு கோபியில் நடந்தது. இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் கோபியில் நுழைவு வாயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோபி கரட்டூர் மற்றும் சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தம் என 2 இடங்களில் நுழைவு வாயில் கட்டப்பட்டு, அன்றைய முதல் –அமைச்சர் கு.காமராஜர் திறந்து வைத்தார்.

இதில் கரட்டூர் அருகே உள்ள நுழைவு வாயில் சமீபத்தில் லாரி மோதி சேதமடைந்து விட்டது. தமிழக அரசு அந்த இடத்தில் புதிய நுழைவு வாயில் கட்டி வருகிறது. அந்த புதிய நுழைவு வாயிலுக்கு, முன்னாள் முதல் –அமைச்சர் கு.காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

கடத்தூர் அருகே உள்ள வெட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1912–ம் ஆண்டு எங்கள் பகுதியில் வசித்து வந்த வெள்ளாச்சியம்மாள் தனக்கு பாத்தியப்பட்ட 4½ ஏக்கர் இடத்தை இந்த கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.

இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் கோவிலுக்குள்ளும் யாரையும் அனுமதிப்பது இல்லை. தற்போது பூஜை ஏதுவும் நடைபெறாமல் கோவில் பாழடைந்து கிடக்கிறது. எனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, கோவிலில் தொடர்ந்து பூஜைகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிப்பாளையம் புதூர், அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், நாங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சித்தோடு அருகே உள்ள கள்ளியம்மாள்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கள்ளியம்மாள்காடு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகிறோம். தற்போது அரசு அதிகாரிகள் எங்களது குடிசைகளை காலிசெய்யும்படி கூறுகிறார்கள். நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால் எங்களுக்கு வேறுஎங்கும் இடம் கிடையாது. எனவே நாங்கள் தொடர்ந்து அங்கு குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஈரோடு மாவட்ட கறவை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் வியாபாரிகள் சங்க தலைவர் கன்னுசாமி தலைமையில், செயலாளர் முருகன் மற்றும் வியாபாரிகள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 வாரங்களாக மாட்டுச்சந்தை நடைபெறவில்லை.

இதனால் வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் கால்நடை சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த 25–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி செய்து வருகிறார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் சமுதாய கூடம், கழிப்பறை, மேல்நிலை குடிநீர் தொட்டி போன்றவைகள் கட்டி கொடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்த நாச்சியம்மாள் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் தனியார் ஒருவரிடம் கேபிள் டி.வி. இணைப்பு பெற்று டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து வந்தேன். அவர் அதிக தொகை கேட்டதால் வேறொருவரிடம் கேபிள் டி.வி. இணைப்பு பெற்று அரசு டி.வி. செட்டாப் பாக்சை வாங்கி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன். எனக்கு முதலில் கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்தவர் தன்னிடம் தான் கேபிள் டி.வி. இணைப்பு பெறவேண்டும் என என்னை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஜனநாயக மக்கள் கழகத்தின் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் முனியாண்டி கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 60–வது வார்ட்டில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளதால் அவைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஈரோடு மாநகர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது. இதை தடைசெய்ய வேண்டும். ஈரோடு மாநகர் பகுதிக்குள் மெடிக்கல் வைத்திருப்பவர்கள் சிலர் மெடிக்கல் உள்ளேயே நோயாளிகளுக்கு ஊசி போடுகிறார்கள். மேலும் போலி மருந்துகளையும் கொடுக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னிமலை குமராபுரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘சென்னிமலை பகுதியில் 20–க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. இந்த மடங்களில் சாமி சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னிமலை பிடாரியூரில் உள்ள மடத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர், மூஞ்சுறு, 2 நாகர், 2 யானை சிலைகள் என மொத்தம் 6 சிலைகள் மாயமாகி உள்ளது. எனவே மாயமான சிலைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து எதிர்பாரத விதமாக இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல் –அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட விளையாட்டு அதிகாரி நோயிலின் ஜான் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story