அந்தியூர் அருகே முதியவர் கொலை: பேரன் உள்பட 2 பேர் கைது


அந்தியூர் அருகே முதியவர் கொலை: பேரன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 5:50 AM IST (Updated: 1 Jan 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே நடந்த முதியவர் கொலையில் பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள ஜர்த்தலை சேர்ந்தவர் ஜோகி (வயது 75). இவருடைய மனைவி சின்னத்தாய். இவர்களுக்கு சேகர், ராமலிங்கம், சின்னராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் சேகரின் மனைவி சித்ரா. இவர்களுடைய மகன் குமரேசன் (20). சேகர் மற்றும் அவருடைய தம்பிகளுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இதனால் குமரேசன் தன்னுடைய தாய் சித்ராவை அழைத்துக்கொண்டு திருப்பூருக்கு சென்றுவிட்டார். ஜர்த்தலை சேர்ந்த குமரேசனின் நண்பரான முரளிதரனும் (21) தற்போது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். குமரேசனும், முரளிதரனும் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சித்ரா தன்னுடைய குடும்பத்தினரை பிரித்தது சின்னராஜ் என்று மகன் குமரேசனிடம் கூறி உள்ளார். இதனால் கடந்த மாதம் 28-ந்தேதி குமரேசன் மற்றும் அவருடைய நண்பர் முரளிதரன் ஆகியோர் திருப்பூரில் இருந்து ஜர்த்தலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜோகியின் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது குமரேசன், குடும்பத்தை பிரித்த சின்னராஜுடன் பேசக்கூடாது என்று ஜோகியிடம் கூறினார். அதற்கு ஜோகி, ‘எனக்கு மகன்கள் முக்கியம் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் 2 பேரும் உணவு வாங்கி வந்தனர். அந்த உணவில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்தனர். இதைத்தொடர்ந்து அந்த உணவை ஜோகிக்கு கொடுத்து சாப்பிட வைத்தனர்.

அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் 29-ந்தேதி காலை அவர்கள் 2 பேரும் அங்கு சென்றனர். அப்போது ஜோகி வாயில் நுரைதள்ளியபடி கிடந்தார். இதைத்தொடர்ந்து ஜோகியை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் ஜோகியின் மனைவி சின்னத்தாயையும் உடன் அழைத்துச்சென்றனர். பின்னர் ஜோகியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, குமரேசனும், முரளிதரனும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோகிக்கு விஷம் கொடுத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுகுறித்து உடனடியாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஜோகியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனக்கு விஷம் கலந்த சாப்பாட்டை குமரேசன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கொடுத்தனர் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார், முதியவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குமரேசன் மற்றும் முரளிதரனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் ஜோகியை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோகி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, கொலை வழக்காக மாற்றி ஜோகியை கொன்ற 2 பேரையும் தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அந்தியூர் போலீசார் ஜர்த்தல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாலிபர்கள் 2 பேர் வந்தனர். இதனை கவனித்த போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முதியவரை விஷம் வைத்து குமரேசன் மற்றும் முரளிதரன் என்பது இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story