ஈரோடு மாவட்டத்தில் 350 பிளாஸ்டிக் கடைகள் முழு அடைப்பு தடையை நீக்கக்கோரி நடந்தது


ஈரோடு மாவட்டத்தில் 350 பிளாஸ்டிக் கடைகள் முழு அடைப்பு தடையை நீக்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 2 Jan 2019 4:45 AM IST (Updated: 2 Jan 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 350 பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு,

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தநிலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:–

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்த திடீர் உத்தரவால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தமிழக அரசு அளிக்கவில்லை.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. குறிப்பாக சிறு, குறு உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பிளாஸ்டிக் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். அதற்கு மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடித்த பிறகு பிளாஸ்டிக் தடை விதிக்கலாம்.

பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 160 உற்பத்தி நிறுவனங்களும், 350 பிளாஸ்டிக் கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையும் பாதிக்கப்படும்.

எங்களது காலவரையற்ற போராட்டம் காரணமாக பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story