ஜி.எஸ்.டி. வரி மாற்றத்துக்கு பின் சினிமா டிக்கெட் விலை குறைப்பு அமலுக்கு வந்தது - வேலூர், திருவண்ணாமலை தியேட்டர்களில் புதிய கட்டண விவரம்
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டு புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
வேலூர்,
100 ரூபாய்க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகள் மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதுபோல 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த சிலநாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு குறையும்? என்பது பற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
“ரூ.150 ஆக இருந்த முதல் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் ரூ.15 குறைக்கப்படுகிறது. ரூ.120 ஆக இருந்த கட்டணத்தில் ரூ.12 குறைக்கப்படுகிறது. ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள டிக்கெட்டுகளுக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது” என அபிராமி ராமநாதன் கூறினார்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சினிமா கட்டணம் குறைப்பு குறித்து வடாற்காடு மாவட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-
ரூ.200-க்குமேல் இருந்த டிக்கெட் கட்டணத்தில் ரூ.16 குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 கட்டணத்தில் ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.60-க்கு மேல் இருந்த கட்டணத்தில் ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது ரூ.207-ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.191-ஆக குறைந்துள்ளது. ரூ.118-ஆக இருந்த கட்டணம் ரூ.112 ஆக குறைந்துள்ளது. அதேபோன்று ரூ.64-ஆக இருந்த கட்டணம் ரூ.60-ஆக குறைந்துள்ளது.
இந்த கட்டண குறைப்பு நேற்றுமுதல் அமலுக்குவந்து விட்டதாகவும், சில தியேட்டர்களில் சினிமா டிக்கெட் கட்டணங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story