அம்பத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேருக்கு வலைவீச்சு


அம்பத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-03T00:52:52+05:30)

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 மர்மநபர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொலைபேசி இணைப்பகம் அருகில் ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின் 3 ஏ.டி.எம். மையங்கள் அடுத்தடுத்து உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த 2 வாலிபர்கள் சுத்தியல், சிறிய கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அம்பத்தூர் எஸ்டேட் ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

ரோந்து போலீசார், ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்த்தனர். அங்கு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றினர்.

பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரின் உருவமும், அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது.

மேலும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி அந்த வங்கியின் கிளை மேலாளர் ஜாய் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story