செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை
செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
செங்கல்பட்டு,
காஞ்சீரம் மாவட்டம். செங்கல்பட்டு அடுத்த திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியை சேர்ந்தவர் கணேசன். இவர் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா. அவர் செங்கல்பட்டில் மின்வாரிய அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கணேசன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தங்கள் சொந்த ஊரான வேலூருக்கு சென்று விட்டார்.
நேற்று இவரது வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கணேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் இங்கு வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் கணேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.