14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்; தொழிலாளி மீது போலீசில் புகார்
புதுவையில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி கடத்தி சென்றார். அந்த சிறுமிக்கு தாயார் இல்லை. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த சிறுமி பாட்டியின் ஆதரவில் வசித்து வந்தார்.
இந்தநிலையில்தான் ராமு அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அந்த சிறுமியை ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு ராமு தப்பிச்சென்றுவிட்டார். காப்பகத்தில் இருந்த சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறினார். அதையடுத்து அந்த சிறுமியை பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே அந்த சிறுமி தனது பாட்டியிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் சிறுமியிடம் குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் தொழிலாளி ராமு மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி உயர் போலீஸ் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.