மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்து 11 வீடுகள் எரிந்து நாசம்


மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்து 11 வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் அருகே தீ விபத்தில் 11 வீடுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கன்னிமார் கோவிலுக்கு எதிரில் 11 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் மேற்கூரை தகரம் மற்றும் சிமெண்டு சீட்டால் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஒரு வீட்டில் இருந்து புகை வந்தது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த வீட்டில் இருந்து தீ கொழுந்து விட்டு எரிந்து அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதற்கிடையில் திடீரென்று 2 வீடுகளில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீடுகளில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இதைதொடர்ந்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் பள்ளி குழந்தைகளின் நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீ விபத்தில் நாசமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்து நடந்த போது தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் ரமேஷ், பரமசிவம், ஆறுமுகம், தருண், சுப்பிரமணி, பாஸ்கரன், ஜெயராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி உள்பட 11 பேரின் வீடுகளும் எரிந்து நாசமானது. இந்த நிலையில் பள்ளி சென்று மாலையில் திரும்பிய மாணவ- மாணவிகள் எரிந்து நாசம் அடைந்த வீடுகளை பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்கள் மனதை உருக்கியது.

Next Story