ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்தம்


ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 9:12 PM GMT)

ஊட்டி நகராட்சியில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தர சுகாதார பணியாளர்கள் 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஒப்பந்த பணியாளர்கள் 150 பேர் பணிபுரிகின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு கடந்த ஆண்டு 28 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து ஊட்டி, கூடலூர் வழியாக வயநாடு, மலப்புரம், மைசூருக்கு சென்று உள்ளனர். அதேபோல் மைசூரில் இருந்து கூடலூர், ஊட்டி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் உள்ளதாலும், பிரசித்தி பெற்ற ஊட்டி நகராட்சி மார்க்கெட் இயங்குவதாலும், நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆயிரக்கணக்கான வீடுகள் இருப்பதால் தினமும் 15 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகளை நிரந்தர பணியாளர்களுடன் ஒப்பந்த பணியாளர்கள் இணைந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த ஒப்பந்த பணியாளர்களை தனியார் நிறுவனம் ஒன்று, ஊட்டி நகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தி உள்ளது. இதில் ஒரு சிலருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.425 சம்பளம் வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு குறைவாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஊட்டியில் உறைபனி பொழிவால் கடுங்குளிர் நிலவுவதால், ஒப்பந்த பணியாளர்களுக்கு தேவையான கம்பளி ஆடைகள், பி.எப்., மருத்துவ காப்பீடு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

இதனை வலியுறுத்தி நேற்று ஊட்டி நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில், ஊட்டி நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 150 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிவதாக கூறி, 130 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 100 பேருக்கு தினமும் ரூ.400 வீதம் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

கலெக்டர் அறிவித்த சம்பளம்

நகராட்சி மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் 30 பேருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.425 வழங்கப்படுகிறது. கலெக்டர் உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதியமான சாதாரண பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.571-ம் வழங்க வேண்டும். ஆனால் 20 பேருக்கு மட்டும் இந்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தற்போது ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எனவே கலெக்டர் அறிவித்த சம்பளத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும். 150 பேரையும் பணியமர்த்த வேண்டும். பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் நேற்று வழக்கம்போல் பணிபுரிந்தனர். ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி லோயர் பஜார், புளுமவுண்டன் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு, ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதி, பிங்கர்போஸ்ட், லவ்டேல், மஞ்சனக்கொரை, புதுமந்து உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேக்கம் அடைந்து உள்ளன. கடந்த 2 நாட்களாக குப்பைகள் முழுமையாக அகற்றப்படாததால், நகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. பல்வேறு வீடுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட வில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சி பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் எடுப்பதற்கும், ஊட்டியில் எரியும் தெருவிளக்குகளுக்கு மின்கட்டணமாகவும் பல கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு பாக்கி வைத்து உள்ளது. நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய நகராட்சி வணிக வளாகங்கள், கடைகள், மார்க்கெட் கடைகள் ஆகியவற்றுக்கு கடந்த காலத்தில் வாடகை தொகை உயர்த்தப்பட்டு முழுமையாக வசூலிக்கப்பட வில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த ஆண்டு மார்க்கெட் வியாபாரிகள் வாடகை உயர்வு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், எந்த அடிப்படையில் வாடகை வசூலிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

நகராட்சிக்கு வரக்கூடிய வருமானம் முறையாக வசூலிக்கப்பட்டு இருந்தால் நிரந்தர பணியாளர்களுக்கு பணி உயர்வு, பி.எப்., மருத்துவ காப்பீடு போன்றவை வழங்கி இருக்கலாம். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயன்களும் கிடைக்காமல் உள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும். மேலும் ஊட்டி நகரை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story