நீர்மட்டம் 47.50 அடியாக உயர்வு, வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாக உயர்ந்துள்ள நிலையில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் இந்த ஏரி மூலமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், இந்த ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலத்தில் பல்வேறு ஓடைகள் வழியாகவும் தண்ணீர் வரும். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையிலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. ஏரியின் நீர்மட்டத்துக்கு ஏற்ப கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 3-வது முறையாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் வீராணம் ஏரி கடல் போன்று காட்சி அளிக்கிறது. ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக பாசனத்துக்காகவும், ராட்சத குழாய் வழியாக சென்னைக்கு வினாடிக்கு 70 முதல் 76 கனஅடி வீதமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் முதல் பூதங்குடியில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 250 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 30 கனஅடிநீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 140 கனஅடிநீர் திறந்து விடப்பட்டது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 250 கனஅடிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த நீர், சேத்தியாத்தோப்பில் உள்ள அணைக்கட்டில் தேக்கி வைக் கப்பட்டு, ராஜன் வாய்க்கால் மூலம் 27 கிளை வாய்க்கால்கள் வழியாக புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வீணாகவில்லை என்றார்.
Related Tags :
Next Story