பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 100–க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசோதனை நடந்தது.
அலங்காநல்லூர்,
மதுரையை அடுத்த பாலமேட்டில் வருகிற 16–ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்குள்ள மஞ்சமலை சாமி ஆற்றுத்திடலில் வாடிவாசல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாடிவாசல் முன்பு உள்ள மைதானத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்காக பாலமேட்டில் நிரந்தர கான்கிரீட் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பந்தல் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு, இளநிலை உதவியாளர் தேவி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கனகராஜ் மற்றும் பணியாளர்கள் மேற்பார்வையிட்டனர்.
இதற்கிடையே பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் காளையின் வயது, உயரம், திடகாத்திரம், பல்லின் தன்மை, கொம்பின் அளவு மற்றும் நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்பட பல்வேறு பரிசோதனைகளை கால்நடை மருத்துவர் சுரேஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நடத்தினர்.
தொடர்ந்து புகைப்படம் ஒட்டிய ஆவணங்களையும், ஆதார் கார்டு, செல்போன் எண் ஆகியவற்றை ஆய்வு செய்து உடல் தகுதி உள்ள காளைகளுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பாலமேடு வட்டாரத்தில் உள்ள சுமார் 100–க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.