எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்: 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி வழக்கு; மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மதுரை,
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னிடம் மனு அளித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதியிழப்பு செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என 18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 18 தொகுதிகளைச் சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.
இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.