அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு, மாணவ, மாணவிகள் மறியல்


அரசு பஸ்களில் ஏற்ற மறுப்பு, மாணவ, மாணவிகள் மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2019 4:00 AM IST (Updated: 5 Jan 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் அரசு பஸ்களில் ஏற்ற மறுத்ததால் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை, 

மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் திருச்சி அருகே வண்ணாங்கோவில் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி, தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்டவைகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இதற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாசை பயன்படுத்தி, அவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் காலை நேரங்களில் அரசு பஸ்களில் பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்ற மறுப்பதால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை மணப்பாறை பஸ் நிலையத்தின் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை அரசு பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும் கல்லூரி உள்ள பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை என்று கூறி புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர். பின்னர் பஸ்களின் முன்பு நின்றனர்.

இதையடுத்து அங்கு வந்த மணப்பாறை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் அரசு பஸ்களில் செல்ல உடனடியாக வழிவகை செய்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் ஏறி கல்லூரிகளுக்கு சென்றனர். 

Next Story