சேலம் வக்கீல்கள் சங்க தேர்தலுக்கு தடை: கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் தர்ணா போராட்டம்

சேலம் வக்கீல்கள் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம்,
சேலம் வக்கீல்கள் சங்கத்தின் 2019-2021-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. கடந்த 2-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து பொறுப்புகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து பொன்னுசாமி, ராஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், துணைத்தலைவர் பதவிக்கு பாலமுருகானந்தம், இமயவர்மன், ஜெயகுமார், கோவிந்தராஜ் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு முத்தமிழ்செல்வன், செல்வகீதன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு அனந்தகிருஷ்ணன், காந்தி, சதீஷ் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்ற பொறுப்புகளுக்கும் பலர் விருப்பமனு அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சங்க கட்டிட அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இந்தநிலையில், சேலம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் (பார் கவுன்சில்) நேற்று முன்தினம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்புமனுதாக்கல் செய்திருந்த வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வக்கீல் இமயவர்மன் நேற்று காலை, திட்டமிட்டப்படி 11-ந் தேதி சேலம் வக்கீல் சங்க தேர்தலை நடத்த வேண்டும் எனக்கோரி சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க கட்டிடம் முன்பு உட்கார்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சக வக்கீல்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் யாரும் அவருடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவில்லை. சிறிது நேரத்தில் வக்கீல் இமயவர்மனை சக வக்கீல்கள் சமாதானப்படுத்தி 11-ந் தேதி வக்கீல்கள் சங்க தேர்தல் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சேலம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story