பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்கிய சித்தமருத்துவ அதிகாரி பிடிபட்டார்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்கிய சித்தமருத்துவ அதிகாரி பிடிபட்டார்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2019 11:19 PM GMT (Updated: 4 Jan 2019 11:19 PM GMT)

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு சித்தமருத்துவர்களிடம் பரிசுப்பொருட்கள் வாங்கிய மாவட்ட சித்தமருத்துவ அதிகாரியை பிடித்து லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சிகில்ராஜ வீதியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட சித்தமருத்துவ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட சித்தமருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருபவர் டாக்டர் பார்த்திபன்.

இவர் மாவட்டத்தில் உள்ள சித்தமருத்துவ டாக்டர்களிடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுப்பொருட்கள் வாங்க உள்ளதாகவும், இதற்காக அலுவலகத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், வானதி உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது சித்தமருத்துவ அதிகாரி பார்த்திபனிடம் இருந்து ½ பவுன் தங்க நாணயம், 5 வெள்ளி டம்ளர், வெள்ளி சங்கிலி உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவ டாக்டர்கள் தலா ரூ.2 ஆயிரத்து 500 வீதம் பங்கு போட்டு பார்த்திபனுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைப்பற்றப்பட்ட பொருட்களை வைத்து டாக்டர் பார்த்திபனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story