பாம்பனில் புதிய ரெயில் பாலம் அமைக்க மண் ஆய்வு தொடங்கியது


பாம்பனில் புதிய ரெயில் பாலம் அமைக்க மண் ஆய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 5 Jan 2019 5:00 AM IST (Updated: 5 Jan 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

புதிய ரெயில் பாலம் அமைக்க பாம்பனில் மண் ஆய்வு பணி தொடங்கியது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பராமரிப்பு பணி நடந்துவருகிறது. நேற்றுமுன்தினம் முதல் தூக்குப்பாலம் திறக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.மேலும் பாம்பன் ரெயில் பாலம் அருகிலேயே புதிதாக ரெயில்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பாம்பன் பகுதியில் புதிய ரெயில் பாலம் அமைக்க தற்போதுள்ள ரெயில் பாலத்தின் நுழைவு பகுதி அருகில் இருந்து நேற்று முதல் மண் ஆய்வு பணி தொடங்கியது.பாலத்தின் நுழைவு பகுதியில் ரெயில் பாலம் அருகிலேயே ஆழ்துளை எந்திரம் மூலம் பூமியில் துளையிட்டு மண் ஆய்வு நடந்து வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பனில் தற்போதுள்ள ரெயில் பாலம் அருகிலேயே புதிதாக ரெயில் பாலம் அமைக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி அனுமதி வழங்கிவிட்டது.சுமார் ரூ.250 கோடியில் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டாலும் பாலத்தின் திட்ட மதிப்பீட்டுத் தொகை இன்னும் அதிகமாகும்.புதிய ரெயில் பாலம் அமைக்க தற்போதுள்ள ரெயில் பாலம் அருகிலேயே மண் ஆய்வு பணி தொடங்கிஉள்ளது.

கடலில் 20 இடங்களிலும் தரைப்பகுதியில் 2 இடங்களிலும் இந்த மண் ஆய்வு நடைபெற உள்ளது.இந்த மண் ஆய்வு பணி இன்னும் 4 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த மண் ஆய்வு அறிக்கையை வைத்தே கடலில் அமைய உள்ள தூண்களுக்கு எந்த மாதிரியான கலவைகள் பயன்படுத்தலாம் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்க மத்திய ரெயில்வே துறை திட்டமிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கிஉள்ளது. இதனிடையே மதுரையில் அமையஉள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வருகிறார். அந்த விழாவிலேயே அவர் ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதைக்கும், பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட உள்ள ரெயில் பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதையடுத்து நேற்று தென்னக ரெயில்வே கட்டுமான பணி தலைமை பொறியாளர் சுதாகர் ராவ் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் குழு ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே அதிகாரி கூறியதாவது:- ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரூ.208 கோடி மதிப்பீட்டில் 17.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்வே பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. ரெயில்பாதை அமைய உள்ள இடத்தை ஒதுக்கீடு செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. திட்டம் குறித்து முழு விவரங்களையும் அளித்த பின்னர் அதற்கான இடம் ஒதுக்கி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story