பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்; முதல் அமைச்சரிடம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் மனு


பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்; முதல் அமைச்சரிடம் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் மனு
x
தினத்தந்தி 6 Jan 2019 4:45 AM IST (Updated: 6 Jan 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என முதல்–அமைச்சரிடம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பூஜ்யநிலை சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தினசரி 10 கோடி லிட்டர் சாயக்கழிவுநீர் மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு சாய ஆலைகளில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் 3–வது குடிநீர் திட்டம் மூலம் சாய ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர் பொதுமக்களின் அதிகப்படியான பயன்பாட்டிற்காக தினமும் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மிக அற்புதமான இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் கொடுத்து ஊக்குவித்து வருகின்றன.

ஏற்கனவே நமது நாட்டு ஆடைகளின் விலை போட்டி நாடுகளுடன் ஒப்பிடும் போது சுமார் 4 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை சமாளிக்க வேண்டுமென்றால் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு உறுப்பினர்), கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களை சந்தித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன் கோரிக்கை மனு கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகசாமி, பொருளாளர் காந்திராஜன் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மரியாதை நிமித்தமாக பூச்செண்டு கொடுக்கப்பட்டது.


Next Story