பாகூர் அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்; பெண் போலீசுக்கு கத்திக்குத்து


பாகூர் அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்; பெண் போலீசுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Jan 2019 4:00 AM IST (Updated: 6 Jan 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண் போலீஸ் உள்பட 3 பேர் கத்தியால் குத்தப்பட்டார்.

பாகூர்,

விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 35). கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பாகூரை சேர்ந்த வெங்கடேசபெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே வெங்கடேச பெருமாள், சாந்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசபெருமாள் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சாந்தி, தனது அக்கா சாத்தகி, அவரது கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு சென்று, அவரை தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதலின்போது வெங்கடேசபெருமாள் தரப்பினர் சாந்தி, சாத்தகி, சிவானந்தம் ஆகியோரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசபெருமாள், அவரது உறவினர் குமாரவேலு, தங்கை புவனேஸ்வரி ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

இந்த மோதல் தொடர்பாக பாகூர் போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்–இன்ஸ்பெக்டர் வீரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெங்கடேசபெருமாள், ராம்கி (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற சென்ற வெங்கடேசபெருமாள் தங்கை புவனேஸ்வரியை போலீஸ் உடையில் சாந்தி, அவரது அக்கா சாத்தகி ஆகியோர் தரக்குறைவாக திட்டி, எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.


Next Story