காணாமல்போன வாலிபர் வாய்க்காலில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை


காணாமல்போன வாலிபர் வாய்க்காலில் பிணமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Jan 2019 3:45 AM IST (Updated: 6 Jan 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் இருந்து காணமல்போன வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வலையப்பட்டி பகுதியில் இரட்டை வாய்க்கால் உள்ளது. இங்குள்ள கதவணை (செட்டர்) நீரில் மூழ்கியபடி அழுகியநிலையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இரண்யமங்கலம் கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி மணி கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வாய்க்காலில் பிணமாக கிடந்த வாலிபரின் கையில் அவர் பச்சை குத்தியிருந்த அடையாளத்தை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் குளித்தலை அருகே உள்ள ரெத்தினம் பிள்ளைபுதூரை சேர்ந்த சந்திரன் மகன் மலைச்சாமி (வயது 32) என்பதும், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல்போனதும் தெரியவந்தது. இதையடுத்து மலைச்சாமியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மலைச்சாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் மலைச்சாமி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில் தள்ளி விட்டு இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஒருவர் வாய்க்காலில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story