திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்


திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை சிட்கோ பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. நேற்று தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவள்ளூரை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் (வயது 27) கழிவுநீர் லாரியை ஓட்டி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த வீரா (24) கிளினராக உடன் வந்தார். கழிவு நீரை அகற்றிய பிறகு தொழிற்சாலை நிர்வாகத்தினர் கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுகளை அகற்றும்படி அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து வீரா கழிவுகளை அகற்றுவதற்காக தொட்டியில் இறங்கினார். சுத்தம் செய்ய முற்பட்டபோது விஷவாயு தாக்கி அவர் மயக்கம் அடைந்து விழுந்தார். இதையடுத்து அவரை காப்பாற்ற விவேகானந்தனும் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி மயங்கினார்.

இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story