பொள்ளாச்சி அருகே சமையல் எண்ணெய் குடோனில் தீ விபத்து


பொள்ளாச்சி அருகே சமையல் எண்ணெய் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 7:20 PM GMT)

பொள்ளாச்சி அருகே சமையல் எண்ணெய் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அடுத்த சிஞ்சுவாடி தென்குமாரப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 42). இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இவரது தோட்டத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் (53) என்பவர் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து சமையல் எண்ணெய் குடோனாக பயன்படுத்தி வந்து உள்ளார்.

இந்த குடோனில் சமையல் எண்ணெய் நிரம்பிய பேரல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மணிகண்டன் மற்றும் தொழிலாளர்கள் சிலர் குடோனில் பணி புரிந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அழுத்தம் தாங்காமல் பேரல் ஒன்று வெடித்தது. பின்னர் அதில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

சிறிது நேரத்தில் தீ, எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பிற பேரல்களுக்கும் பரவ தொடங்கியது. இதனால் வெப்பம் தாங்காமல் எண்ணெய் நிரப்பப்பட்டு இருந்த பேரல்கள் வெடித்தன. இதனால் தீ கொழுந்து விட்டு பல அடி உயரத்திற்கு எரிந்தது. மேலும் குடோனுக்கு அருகில் இருந்த 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீப்பிடித்து கருகின.

இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருந்தது. இதனால் தீயை அணைக்க உடுமலையில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் குடோன் மேற்கூரை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story