சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Jan 2019 11:15 PM GMT (Updated: 7 Jan 2019 7:53 PM GMT)

சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்திலும், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மேலரதவீதியில் உள்ள தனியார் மண்டபத்திலும் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.பி. மற்றும் கூட்டுறவுத்துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பையும், தாலிக்கு தங்கத்தையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து 80 ஆயிரத்து 906 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 330 பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், 337 பட்டதாரி அல்லாத பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரமும் என மொத்தம் ரூ.249.25 கோடி நிதியுதவியும், 5,336 கிராம் தங்கமும் வழங்கப்பட உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான தாலிக்கு தங்கம், திருமணமாகும் பெண்களுக்கு நிதியுதவி என்பது இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் ஆகும். அவர் அறிவித்த திட்டங்களை தான் தற்போது அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. ஜெயலலிதா வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பாக ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story